இன்று இந்தியாவின் சுதந்திரதினம் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய மோடி உரையாற்றுகையில்,
140 கோடி மக்களின் கொண்டாட்டம் இந்த நன்னாள். ஆப்பரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். கோடிக்கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது.அரசியலமைப்பு சட்டம் தான் இந்தியாவுக்கு ஒளிகாட்டும் விளக்கு. கடந்த 78 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இந்திய சுதந்திரத்தில் பெண்களின் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு சல்யூட். ஆப்பரேஷன் சிந்தூர் இந்தியாவின் இயல்பை காட்டுகிறது. இந்திய ராணுவம் முழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று சிறப்பு வாய்ந்த நாள் ஆப்பரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆப்பரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்ந்தது. பாக் பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் பாடம் புகட்டியது. பல 100 கி.மீட்டர் தூரம் உள்ளே சென்று எதிரிகளை அழித்தோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை பொறுத்து கொள்ள மாட்டோம்.
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பது குறித்து நமது படைகள் தீர்மானிக்கும். அணு ஆயுத பூச்சாண்டிகளுக்கு எல்லாம் இனி இந்தியா பயப்படாது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்து ஊக்கப்படுத்தியவரையும் தண்டிப்போம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்புடையதல்ல. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓடாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது. சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது. நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்றோர் தனது உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர் என்றார்.