Wednesday, October 22, 2025 3:07 pm
மாத்தறை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
தேசிய பாதுகாப்பு இதுதானா எனவும் வினா தொடுத்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
தனது கடமையை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தில் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் விசாரணைகள் இடம்பெறும் எனவும் கூறினார்.
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அமைச்சர் வழங்கிய பதில் பொய்யானது என கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகவும் குற்றம் சுமத்தினர்.
பதிலுக்கு அமைச்சர்களும் விளக்கமளித்தனர். முன்னைய ஆட்சியாளர்கள் புரிந்த கொலைகள் பற்றிய பட்டியல்களை அமைச்சர்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.