போர் காலத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட பொது மக்களுடைய காணி மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காணிகளை மீள ஒப்படைப்போம் எனக் கூறியவர்கள் பதவிக்கு வந்த பின்னர் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்று காண்பிப்பதாகவும் அந்த அமைப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் வலி, வடக்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பிரதிநிதிகள் அவ்வாறு தெரிவித்தனர்.
ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்து ஒரு வருட காலம் கடந்து விட்ட பின்னரும் கூட காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. ஆனால் கையளிப்பதாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வாக்குறுதி வழங்குவார்.
அமைச்சர் சந்திரசேகரனும் அவ்வாறு பல தடவைகள் வாக்குறுதி வழங்கியிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜனாதிபதியாக இருந்த போது கையளிக்க தயாராக இருந்த காணிகளையே, அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் பொதுமக்களிடம் கையளித்திருக்கின்றது.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதாக கூறிக் கொண்டு, கீரிமலை பிரதேசத்தில் ரேடார் சுமார் இரண்டு ஏக்கர் தனியார் காணியை சுவிகரிப்பதற்கு கடற்படை ஏற்பாடுகளை செய்கின்றது.
அதே வேளை, யாழ்ப்பாணம் – பலாலி வீதியை முழுமையாக திறந்த பின்னர் ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கும் பலாலி காணிகளை மீண்டும் மக்களிடம் கையளித்துள்ளமை போன்று பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
பலாலியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். ஆகக் குறைந்தது 15 வருடங்கள் தொடர்ச்சியாக தங்கள் காணிகளை கையளிக்குமாறு கோரி அவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பலாலியில் தனியார் காணிகளை பலாத்காரமாக கையகப்படுத்தி இராணுவத்துக்கு தேவையான வைத்தியசாலைகள் அமைக்கப்படுவதாக அந்த அமைப்பினர் மேலும் குற்றம் சுமத்தினர்.